Periya Kandi Amman of Veerapur
AMMAN TEMPLE IN TAMILNADU, PERIYA KANDI AMMAN TEMPLE IN VEERAPUR,
Wednesday, 1 July 2015
Periya Kandi Amman of Veerapur
திருச்சியில்
உள்ள மணப்பாறையில் இருந்து பதினான்கு கிலோ தொலைவில் உள்ளது வீரப்பூர்.
அந்த ஊரில் உள்ள பெரிய காண்டி அம்மனின் ஆலயம் பற்றிய கதை சுவையானது.
ஒரு முறை ஐந்து தலை நாகம் ஒன்று தனக்கு பார்வதி மகளாகப் பிறக்க வேண்டும் என்று கடும் தவம் புரிந்தது. அவளும் அதற்கேற்ப அதற்கு பிறந்தாலும் அவள் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத அலியாகப் பிறந்தாள். அவள் தன்னுடைய அந்த நிலையை மாற்றுமாறு சிவ பெருமானிடம் வேண்டிக் கொள்ள அவரும் அவளை ஊசி முனையில் நின்று கொண்டு தவமிருக்குமாறு கூறினார்.
அதன் பின் இரண்டு சகோதரர்கள் அந்த இடத்தில் சண்டையில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்களின் சகோதரியான அருக்காணி அவளுக்கு அந்த நிலையில் இருந்து விடுதலை தருவாள் என்றும் கூறினார். அவளுக்கு துணையாக இருக்க ஆறு கன்னிகளையும் அவர் அனுப்பினார். அவள் செய்த தவம் அங்கு தவத்தில் இருந்த வீரம்ஹா முனிக்கு இடையூறாக இருந்தது. அதன் பின் அவருக்கு அங்கு தவத்தில் இருந்தவள் பார்வதி தேவியே எனத் தெரிந்ததினால் அவரும் அங்கு வந்து அவளுக்கு காவலாக நின்றார்.
அந்த இடம் பொன்னிவள நாடு என்ற பெயரில் அப்போது இருந்தது. அதை பொன்னர் மற்றும் சங்கர் என்ற இரண்டு சகோதரர்கள் ஆண்டு வந்தனர். தலையூர் கலி என்ற மற்றொரு நாட்டு மன்னன் அவர்கள் மீது பொறாமை கொண்டு இருந்தான். அந்த சகோதரர்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் அவர்களை வெல்வது கடினம் என்பதை அவன் உணர்ந்தான். ஆகவே அவர்களை பிரிக்க முடிவு செய்து பொன்னருடைய அரண்மனையில் தானியங்களை அளக்க தங்கத்திலான குடுவையை செய்து அனுப்பினான். அதை கொண்டு சென்ற தட்டானும் அந்த அளவுக் கோப்பை சோழ நாட்டு மன்னனின் முத்துக் குவியல்களை அளந்தது என்று கூறினான் அதன் பின் மாலை நேரமாகி விட்டதினால் அதை பத்திரமாக பூஜை அறையில் வைக்கச் சொன்னான். அந்த அறையில் இருந்த சூட்டினால் அந்த கோப்பையின் மீது பூசப்பட்டு இருந்த தங்கம் உருகி வெறும் மரக் கோப்பையே மீதம் இருந்தது.
மறுநாள் அந்த மன்னனை மற்றொரு ஊரில் இருந்த வெள்ளங்குளத்தில் குளித்து விட்டு விநாயகரை தரிசிக்குமாறு கூறினான். அதை அறியாத மன்னனும் தனது சகோதரன் சங்கரை அந்த இடத்துக்கு காவலாக வைத்துவிட்டு தனது அத்தையின் மகன்களை அரண்மனையின் வாயிலில் காவலுக்கு நிற்க வைத்துவிட்டப் பின், நாட்டின் பாதுகாப்பை தனது படை தளபதி சம்புகாவிடம் தந்து விட்டுச் சென்றான்.
அவன் கிளம்பிச் சென்றதும் தலையூர் மன்னன் பெரும் படையுடன் வந்து தாக்குதல் நடத்த, சம்புகா தனது பன்னிரண்டு ஆட்களுடன் அவர்கள் அனைவரையும் அடித்து விரட்ட தப்பி ஓடிச் சென்ற அந்த மன்னன் மீண்டும் பெரிய படையை திரட்டிக் கொண்டு போருக்கு வந்தான். அவர்களை மன்னனின் மூன்று மகன்களும் போரிட்டு விரட்டி அனுப்பினாலும், மீண்டும் சங்கர் அவர்களை அடித்து விரட்ட தலையூர் கலி மீண்டும் இன்னும் பெரிய படையுடன் வந்து போரிட்டான் . ஆனால் அவர்களுடன் சங்கர் சண்டையிட்டு விரட்டினாலும், ஒரு எதிரி படை வீரன் போல வந்து இருந்த மாயக் கண்ணன் ( கிருஷ்ணர்) சங்கரை கொன்றார். அவனுடைய ஆயுள் காலம் முடிந்து விட்டதினால் சங்கரை தான் கொலை செய்துவிட்டதாக கண்ணன் கூறினார்.
இதற்கு இடையில் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த பொன்னரை அந்த தட்டான் கல்லைத் தூக்கிப் போட்டு கொல்ல முயன்றான். அவன் அதில் இருந்து தப்பிவிட்டு அந்த தட்டானை கொன்று விட்டு ஊருக்கு திரும்பி வந்தவர் தன்னுடைய இறந்து கிடந்த சகோதரனைப் பார்த்தார். மாயக் கண்ணனோ அவன் முன் தோன்றி அவர்களது பிறப்பின் ரகசியத்தைக் கூறியதும் பொன்னர் தன்னுடைய வாளை உருவி எடுத்து தன்னுடைய தலையை வெட்டிக்கொண்டு மடிந்தார். அதை கண்ட அவருடைய தங்கை அருக்காணி அழுதபடி ஓடி வந்தாள். அவளை சாந்தப்படுத்த பெரிய காண்டி அம்மன் தனது ஆறு பணியாட்களான பெண்களை அனுப்பினாள். அவர்கள் அங்கு சென்று அவளுக்கு ஆறுதல் கூறி அவளை பணிப்பெண்ணாக மாற்றிக் தம்முடன் ஏழாவது பெண்ணாக சேர்த்துக் கொண்டார்கள்.
அருக்காணியை அழைத்துக் கொண்டு அவர்கள் பெரியகாண்டி அம்மனிடம் செல்ல அலியாக இருந்த பெரிய காண்டி அம்மன் மீண்டும் பெண்ணாக மாறினாள். அதன் பின் பெரியகாண்டி அம்மன் யுத்தம் நடந்த இடத்துக்கு சென்று பொன்னர்-மற்றும் சங்கருக்கு மீண்டும் உயிர் கொடுத்து புதுப் பிறவி எடுக்க வைத்தாள். அதன் பின் அவர்கள் பூமிக்கு எந்த காரணத்துக்காக வந்தார்களோ அந்தக் காரியம் முடிந்து விட்டது எனக் கூறி அவர்கள் மீண்டும் தேவலோகம் கிளம்பிச் செல்லுமாறு கூறி விட்டு அவர்களுடைய சகோதரியை பெரியகாண்டி அம்மனும் அவள் பணிப் பெண்களும் பாதுகாப்பார்கள் எனக் கூறினாள்.
பெரியகாண்டி அம்மன் முன்னர் தவம் செய்து கொண்டு இருந்த போது வீர சாங்கன் பூசாரி என்ற தேன் எடுப்பவனை அவள் சந்தித்தாள். அவனோ தாம் அனைவரும் அசுத்தமானவர்கள் என்பதினால் அவளுக்கு தர ஒன்றும் இல்லையே என வருத்தமுற அவளோ அவன் எதை தந்தாலும் பெற்றுக் கொள்வதாகக் கூறினாள். ஆகவே அவன் பனை ஓலையினால் குடுசை போட்டு மலை உச்சியில் அவளுக்கு ஆலயம் அமைத்தான் . ஆனால் அதன் மீது ஏறிச் சென்று தரிசனம் செய்வது கடினமாக இருந்ததினால் பின்னர் அதை மலைக்கு கீழே இருந்த வீரப்பூருக்கு மாற்றி அமைத்தான்.
பெரிய காண்டிஅம்மன் சுத்த சைவம் என்பதினால் அவளது ஆலயம் தனியாக அமைந்தது. அந்த ஆலயத்தில் இருந்து அரை கிலோ தொலைவில் சங்கர்- பொன்னர் மற்றும் அவர்களது சகோதரி தங்கள் என்பவளுக்கும், பார்வதிக்கு துணையாக நின்ற ஆறு கன்னிகைகளுக்கு என அனைவருக்கும் வடக்கு நோக்கி உள்ளபடி இன்னொரு ஆலயம் அமைத்தனர்.
அதன் பின் கிழக்கு நோக்கி இன்னொரு தனி ஆலயம் கட்டப்பட்டு அங்கு கருப்பண்ணசாமிக்கு சன்னதி அமைக்கப்பட்டது. அது போல மகாமுனி மற்றும் வீரம் ஆஹ முனிக்கும் மேல் கூரை இல்லாத ஆலயம் அமைக்கப்பட்டு அவர்களும் கிராம தேவதைகளாக வணங்கப்பட்டனர் .
மாசி மாதங்களில் பெரிய காண்டி அம்மனுக்கு திருவிழா நடைபெறுகிறது. பொன்னர் மற்றும் சங்கரின் சந்ததியினர் அங்கிருந்து ஒரு பிடி மண் எடுத்துப் போய் பல இடங்களில் ஆலயங்கள் அமைத்து உள்ளார்கள். பெரியகாண்டி அம்மன் வேண்டியதை தருகிறாள் என நம்பப்படுவதால் ஆலயத்தில் எப்போதுமே கூட்டம் உள்ளது.
Subscribe to:
Posts (Atom)